
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 43 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை கடந்த வருடம் ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.
அத்துடன் அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அந்த வாய்ப்பிலும் அதிரடியாக விளையாடிய தோனி இறுதி ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இதனிடையே அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான சென்னை அணியில் தோனி அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐ.பி.எல். தொடரே அவரது கடைசி தொடர் என்று அனைவரும் நினைத்த வேளையில் அடுத்த சீசனிலும் அவர் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது அனுபவமும் அறிவும் நிச்சயம் சென்னை அணிக்கு கை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடி வரும் மகேந்திரசிங் தோனி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓய்வு குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "2019-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன். கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில வருடங்கள் என்னால் விளையாட முடியும் என்பது உங்களுக்கு தெரியும். குழந்தையாக பள்ளிக்கூடத்தில் விளையாடியது போல் நான் விளையாட விரும்புகிறேன்.
இளம் வயதில் நாம் தங்கியிருந்த காலணியில் மாலை 4 மணி விளையாடுவதற்கான நேரம். அப்போது நாங்கள் விளையாடச் சென்று குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக கிரிக்கெட் விளையாடுவோம். அதற்கு வானிலை ஒத்துழைக்காவிட்டால் கால்பந்து விளையாடுவோம். அதே போன்ற அப்பாவித்தனமான கிரிக்கெட்டை நான் விளையாட விரும்புகிறேன். ஆனால் அது சொல்வதை விட கடினம். ஒரு வீரராக நான் எப்போதும் இந்திய அணிக்காக நன்றாக விளையாடவே விரும்பினேன்.
ஏனெனில் கடந்த காலங்களில் சொன்னது போல் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. பெரிய தொடரில் அல்லது வெளிநாடுகளில் நாட்டுக்காக பெரியளவில் சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே நாட்டுக்காக அசத்துவதே எனக்கு முதலில் முக்கியம். அதற்கு உங்களுக்கு எது சிறந்த வழி என்பதை கண்டறிய வேண்டும். எனக்கு கிரிக்கெட் மட்டுமே அனைத்துமாக இருந்தது. அதற்காக எப்போது தூங்குவது, எழுந்திருப்பது, என்ன தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற விஷயங்கள் முக்கியம். அவற்றை செய்தால் வீரர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான விஷயங்கள் பின்னர் அமையும்" என்று கூறினார்.