ஐ.பி.எல்.: அந்த அணியிடம் நிறைய கிரிக்கெட் அறிவு உள்ளது - கங்குலி பாராட்டு

4 hours ago 3

மும்பை,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 31 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 153 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சுப்மன் கில் 61 ரன்களுடனும் (43 பந்து, 9 பவுண்டரி), ரூதர்போர்டு 35 ரன்களுடனும் (16 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

குஜராத் தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். மேலும் புள்ளி பட்டியலிலும் 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ள்து.

இந்நிலையில் குஜராத் அணியிடம் கிரிக்கெட்டை பற்றிய நல்ல அறிவு இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் கங்குலி பாராட்டியுள்ளார்.

இது குறித்து கங்குலி தனது எக்ஸ் பக்கத்தில், " ஐ.பி.எல். தொடரில் தங்களது முதல் சீசனில் இருந்தே குஜராத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களின் அணி அமைப்பிலும் அணுகுமுறையிலும் நிறைய கிரிக்கெட் அறிவு உள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக தனது குணங்களை உண்மையிலேயே அபாரமான விளையாட்டு உணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article