
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதன்படி முதலாவதாக அகமதாபாத்தில் நடைபெற உள்ள 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் டாப் 2 இடத்திற்குள் இருப்பதை உறுதி செய்து விடும்.
மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது. 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி இதுவரை கடைசி இடம் பெற்றது கிடையாது. எனவே பெரிய வெற்றியோடு தொடரை நிறைவு செய்ய சென்னை அணி போராடும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி குஜராத் அணி பந்துவீச உள்ளது.