
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் வரும் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த கேள்வி இப்போதே பலரது மனதில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்குத்தான் அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "தற்போதைய சன்ரைசர்ஸ் அணியின் பிளேயிங் லெவனை பார்க்கையில் தொடக்கத்தில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் ஆகிய மூன்று வீரர்கள் அதிரடியான வீரர்களாக இருக்கிறார்கள். அவர்களால் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முடியும். அதுமட்டுமின்றி மிடில் வரிசையிலும் ஹென்ரிச் கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
மேலும் விக்கெட் கீப்பராக அபினவ் மனோகரும், கேப்டனாக பேட் கம்மின்சும் அடுத்தடுத்த இடங்களை வலுப்படுத்துகிறார்கள். மீதமுள்ள நான்கு இடங்களில் முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ஆடம் ஜம்பா, ராகுல் சஹார் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அந்த அணியால் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் ஆதிக்கத்தை செலுத்த முடியும். மேலும் இந்த அணி பார்மில் இருந்தால், இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வெல்லும் வலிமையைக் கொண்டுள்ளது" என்று கூறினார்.