மராட்டியம்: தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்து

3 hours ago 2

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டம் போட்வாட் ரெயில் நிலையம் அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியானது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த கிராசிங் கேட் மீது மோதியது.

இதனால் கேட்டை உடைத்துக்கொண்டு தண்டவாளத்தில் லாரி சிக்கியது. அதே சமயம் அமராவதி எக்ஸ்பிரஸ் பயணிகளுடன் அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரில் லாரி ஒன்று தண்டவாளத்தில் நிற்பதைக்கண்ட ரெயிலின் லோகோ பைலட் ரெயிலின் வேகத்தை குறைத்தார். இருப்பினும் ரெயில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனிடையே லாரி டிரைவர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகில் உள்ளவர்களிடன் உதவிக்கோர சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விபத்தில் லாரி டிரைவர் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவலறிந்த ரெயில்வே காவல்துறை மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தை சரிசெய்யும் பணியைத் தொடங்கினர்.

விபத்தில் லாரியானது ரெயில் எஞ்ஜினில் சிக்கியதால் அதனை அகற்றும் பணி தாமதமானது. இதனால் ரெயிலானது 6 மணி நேரம் காலதாமதத்திற்கு பின்னர் அங்கிருந்து சென்றது. ரெயிலின் லோகோ பைலட் சரியான நேரத்தில் ரெயிலின் வேகத்தை குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article