
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. மேலும் 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததன் காரணமாகவே தோல்வியை சந்தித்தது என்று பலராலும் பேசப்பட்டது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் சொதப்பியது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் அந்த தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தமக்குக் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக புஜாரா கூறியுள்ளார். அந்தத் தொடரில் தாம் விளையாடியிருந்தால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக இந்தியா ஹாட்ரிக் சாதனையை படைத்திருக்கும் என்று புஜாரா ஏமாற்றதுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கண்டிப்பாக ஒரு வீரராக நீங்கள் எப்போதும் இந்திய அணிக்காக விளையாடுவதை விரும்புவீர்கள். வெற்றியைப் பெறுவதற்காக என்னால் முடிந்ததை நான் செய்து வருகிறேன். இந்திய அணிக்கு தேவைப்பட்டால் மீண்டும் நாட்டுக்காக விளையாட நான் தயாராக இருக்கிறேன். அதற்காகவே நான் உள்ளூரில் தொடர்ந்து விளையாடி வருகிறேன்.
கடந்த சில வருடங்களாகவே இங்கிலாந்தில் கவுன்டி தொடரிலும் விளையாடி வருகிறேன். உள்ளூரில் நான் நிறைய ரன்கள் குவித்தேன். எனவே மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அதை 2 கைகளால் பிடித்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நாம் ஹாட்ரிக் வெற்றியை பெற விரும்பினோம்.
ஒருவேளை நான் அங்கே விளையாடிருந்தால் தோல்வியை தவிர்த்திருப்பேன். இம்முறை இந்திய கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆண்டர்சன் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. ஸ்டுவர்ட் பிராட் இனிமேலும் அவர்கள் அணியில் இடம் பிடிக்க மாட்டார்" என்று கூறினார்.