"ஸ்வீட்ஹார்ட்" சினிமா விமர்சனம்

2 hours ago 1

சென்னை,

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

சிறு வயதிலேயே தாயைப் பிரிந்து, தந்தையை இழந்து தனிமையின் பிடியில் வளரும் ரியோ ராஜ், சமூகத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து உண்மையான காதலுடன் வாழ முடியாது என்ற சிந்தனை கொண்டவராக இருக்கிறார். இதற்கிடையில் கோபிகாவை எதிர்பாராத விதமாக சந்திக்கும் ரியோராஜ், அவருடன் நட்பாக பழகுகிறார். ஆனால் ரியோ ராஜ் நடவடிக்கையில் ஈர்க்கப்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார் கோபிகா. ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்க, எல்லை மீறிய பழக்கத்தால் கோபிகா கர்ப்பம் அடைகிறாள். குழந்தையை பெற்றுக் கொள்ள கோபிகா தயாராக இருந்தாலும், ரியோ ராஜ் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். கருவை கலைக்க நடவடிக்கை எடுக்கிறார். அது நடந்ததா, இல்லையா? காதலர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

ரியோராஜ் நவநாகரிக இளைஞனாக கவனம் ஈர்க்கிறார். எதார்த்தமான அவரது நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. காதலை வெறுக்கும் போதும், பின்னர் காதலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போதும் அவரது நடிப்பு பாராட்டை அள்ளுகிறது. அழகான நடிப்பால் கோபிகா வசீகரிக்கிறார். காதலில் ஈடுபடுவது, ரொமான்ஸ் பிறகு பிரேக் அப் என பல்வேறு பரிமாணங்களில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை கொட்டியுள்ளார்.


ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பணிக்கர், அருணாச்சலம், துளசி சிவமணி, பாசி ஹிராயா, சுரேஷ் சக்கரவர்த்தி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. படத்துடன் ஒன்ற செய்கின்றன. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உயிரோட்டம். பின்னணி இசையும் பிரமாதம்.

படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே தொய்வு இருந்தாலும், இரண்டாம் பாதியில் பரபரப்பான கதைக்களம் அதை மறக்கடிக்க செய்கிறது.


வழக்கமான காதல் கதை என்றாலும் அதில் எதார்த்தங்களையும், உணர்வுப்பூர்வமான காட்சிகளையும் ஒருங்கிணைத்து, ரசிக்கும்படியான கதையாக கொடுத்து கவனம் இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்வினீத் சுகுமார். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.

Read Entire Article