ஐ.பி.எல்.2025; கொல்கத்தா அணி என்னை தக்க வைக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால்... - வெங்கடேஷ் ஐயர்

2 months ago 12

கொல்கத்தா,

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியானது பல அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டனான அவரை வெளியேற்றிய அந்த அணியின் நிர்வாகம் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, ரமன் தீப் சிங்கை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தா அணி தன்னை தக்க வைக்காதது சற்று ஏமாற்றம் அளித்ததாகவும் அதன் காரணமாக தான் அழுததாகவும் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, கே.கே.ஆர் அணியை பொறுத்தவரை அது ஒரு முற்றிலுமான குடும்பம். அங்கு இருக்கும் 20 - 25 வீரர்கள் மட்டுமல்லாமல் நிர்வாகம், ஊழியர்கள் என அனைவருமே ஒரு குடும்பமாக இருந்தோம். முதலில் என்னை கே.கே.ஆர் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னை தக்க வைக்காததால் எனக்கு அழுகை வந்தது. இருப்பினும் நிச்சயம் மீண்டும் என்னை கே.கே.ஆர் அணி தேர்வு செய்யும் சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

மீண்டும் நான் கொல்கத்தா அணிக்காக விளையாடும்போது நிச்சயம் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை என்னை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் நான் எந்த அணிக்காக விளையாட போகிறேனோ அந்த அணிக்காக என்னுடைய முழு பங்களிப்பை வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article