* சிறப்பு செய்தி
சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிளஸ் 2க்கு பிறகு மேற்படிப்புகளுக்கு மாணவர்களின் முதன்மைத் தேர்வாக பொறியியலும், மருத்துவமும் இருந்தன. 2000-க்குப் பிறகான காலகட்டத்தில் இந்தியாவில் உற்பத்தித் துறையும், தகவல் தொழில்நுட்பத்துறையும் (ஐ.டி) வளர்ச்சியடையத் தொடங்கியிருந்த நிலையில் பொறியியல், கணினி அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். காலப்போக்கில் இந்த நிலை மாறி கலை, அறிவியல் படிப்புகளில் மீண்டும் மாணவர்களின் கவனம் குவிந்தது. அந்தக் கவனம் இன்றைக்கும் தொடர்கிறது என்றாலும், தொழில்நுட்ப மேம்பாடும், தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறையின் வளர்ச்சியும் பொறியியலில் புதிய படிப்புகளை உருவாக்கியிருக்கின்றன.\
இந்நிலையில், 2ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் தொடங்கி விட்டன. பொறியியல் படிப்புகளில் ஏஐ, டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற துறைகளை தேர்வு செய்து படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் இன்ஜினியரிங் படிப்பில் ஏஐ, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி , மெஷின் லேர்னிங், டேட்டா அனலிஸ்ட் உள்ளிட்ட படிப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தால் இயங்கும் இன்றைய உலகில் டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாக உள்ளதால் சைபர் செக்யூரிட்டி படிப்பும் மிக பிரபலமான ஒன்றாக உள்ளது.
இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை பொருத்தவரை அடுத்த கட்டத்தை நோக்கி ஐடி கம்பெனிகள் சென்று கொண்டிருக்கின்றன. ஏஐ மூலமாக கோடிங், வைப் கோடிங் முறைக்கும் மாறி வருகின்றன. தற்போது இருக்கும் நம்முடைய சிலபஸ் 4 வருடங்களில் மாறலாம். எனவே எதிர்காலத்திற்கும் நாம் சேர்த்து படிக்க வேண்டும். ஒரு காலத்தில் 2 படிப்புகள் இருந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தற்போது 12 படிப்புகள் வந்து விட்டன. 2029ல் மாணவர்கள் படித்து வெளியேவரும்போது தேவைக்கு அதிகமான கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் வெளியே வருவார்கள்.
இதனால் ஐடி துறைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும், போட்டிகளும் அதிகமாக இருக்கும். இதை பலரும் உணர்ந்து வருவதால் தற்போது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிப்புகளுக்கு மோகம் திரும்பி விட்டது. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் (இ.சி.இ), எலட்ரிக்கல் அண்ட் எலக்ரானிக்ஸ் (இ.இ.இ) படிப்புகளுக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளது. பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கும் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பான இத்துறை, மருத்துவ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மருத்துவ உபகரணங்களை வடிவமைத்தல், மருத்துவப் பயன்பாடுகளுக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், சிறந்த நோயறிதலுக்கான இமேஜிங் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்றவை இத்துறையில் அடங்கும். அதுபோல ரோபோட்டிக், சைபர் செக்யூரிட்டி படிப்புகளுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
The post ஏஐ மாணவர்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன மீண்டும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மோகம் appeared first on Dinakaran.