கரூர், மே. 14: இலவச புற்று நோய் பரிசோதனைகள் செய்து ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை பெறலாமென கலெக்ட்ர் தெரிவித்திருந்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சமூக அளவிலான கருப்பப்பை வாய், மார்ப மற்றும் வாய்ப்புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, முதற்கட்டமாக இந்த திட்டம் கடந்த 12ம்தேதி, திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி வட்டாரத்தில் உள்ள திருப்பாச்சூர் துணை சுகாதார நலவாழ்வு மையத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பொதுவான புற்று நோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பப்பைவாய் புற்று நோய் ஆகிய மூன்று புற்று நோய்களையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதல்வர் ஆணைப்படி செயல்படுத்தப்படவுள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களை கொண்டு புற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்புகளை அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும்.
இதில், கருர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் கரூர் மருத்துவக் கல்லு£ரி மருத்துவமனை உள்ளிட்ட 45 மையங்களில் புற்று நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 101 கிராமப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் மற்றும் 4 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உட்பட 105 மையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புற்று நோய்க்கான இலவச பரிசோதனை வசதிகள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின்படி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை வாய்ப்புற்று நோய் பரிசோதனையும் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்பக மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு புற்று நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்படின் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லு£ரி மருததுவமனை மற்றும் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவச புற்று நோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கரூர் மாவட்டத்தில் இலவச புற்று நோய் பரிசோதனைகள் appeared first on Dinakaran.