புதுடெல்லி,
மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ. எனும் செய்யறிவு தொழில்நுட்பங்கள் கொண்ட செயலிகள்/கருவிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏனெனில் ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது, அரசு ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு அபாயங்களை ஏற்படுத்தலாம் என்று விளக்கம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஜன. 29-ம் தேதி இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் தரவுப் பாதுகாப்பு கருதி டீப்சீக் (DeepSeek) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, அலுவலகக் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட ஏ.ஐ. கருவிகள்/செயலிகள் இருக்கும்போது அது அரசுத் தரவுகள் மற்றும் ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறியுள்ளது.