தாக்குதல் நிறுத்தம்: எல்லையில் நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வரும் இந்தியா

3 hours ago 1

ஸ்ரீநகர்,

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக எல்லையில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவும் தக்க பதிலடியை மூர்க்கமாக கொடுத்தது. இதில் பாகிஸ்தானில் உள்ள ரபிகுய், முரிட் சக்லலா, ராம்கியார் கான், சுக்குர், சுனியன் உள்பட 8 ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது. இதில் பாகிஸ்தான் நிலைகுலைந்தது என்றே கூறலாம்.

இதனால் பாகிஸ்தான் பணிந்தது. எனவே மோதல் ஒருபக்கம் நடந்து வந்த நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதால், அதுபற்றிய தகவல் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் தொலைபேசியில் தொடர்ந்து பேசினர். இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு துணை பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான இஷாக் டார் தனது எக்ஸ் தள பதிவில், 'பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அமைதிக்காக பாடுபட்டு வருகிறது' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை இயக்குனர் இன்று (அதாவது நேற்று) பிற்பகல் 3.35 மணிக்கு இந்திய பாதுகாப்புத்துறை இயக்குனருடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும், ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவார்கள் என்று அவர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது, எனவே இன்று (அதாவது நேற்று) மாலை 5 மணி முதல் இந்த தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வரும்" என்றார். ஆனால், இந்த போர் நிறுத்த அறிவிப்பை மீறி எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியாக தொடர்ந்தது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், ஆக்னூர், பிர்பாஞ்சால் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் திருப்பி அடிக்கத்தொடங்கினர்.

பாகிஸ்தானின் அத்தனை டிரோன்களையும் நடுவானிலேயே தாக்கி அழித்தனர். இதையடுத்து இரவில் பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக்கொண்டது. இதையடுத்து எல்லையில் ஓரளவு பதற்றம் தணிந்துள்ளது. எனினும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய உன்னிப்பாக சூழலை கண்காணித்து வருகிறது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து மீண்டும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Read Entire Article