சென்னை,
2 ஆஸ்கார் விருதுகளுக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் ஈரானிய மொழி படங்கள் உள்ளிட்ட சர்வதேச திரைப்படங்களிலும் பணியாற்றி, ஏராளமான விருதுகளை வென்று குவித்துள்ளார். சுமார் 32 ஆண்டுகளை கடந்து இந்திய சினிமா துறையில் தற்போது வரை முன்னணி இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் யாரிடமும் நெருங்கி பழக மாட்டார் என்று பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஏ.ஆர்.ரகுமான் தனது இசை வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி மற்றவர்களிடம் எளிதில் மனம் திறந்து பேசுவதில்லை. நீண்ட கால நண்பர்களைத் தவிர, யாரிடமும் அவர் நெருங்கி பழகி நான் பார்த்ததில்லை. அவர் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவோ அல்லது நெருங்கிய பிணைப்பை உருவாக்கவோ மாட்டார்' என்றார்.