
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டு பிளெஸ்சிஸ் - கே.எல். ராகுல் களமிறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனையடுத்து கை கோர்த்த அபிஷேக் போரல் - கே.எல்.ராகுல் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
சிறிது நேரம் நிதானம் காட்டிய இருவரும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 106 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. அபிஷேக் போரல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே கே.எல்.ராகுல் 35 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல் 25 ரன்களில் அவுட்டானார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய கே.எல். ராகுல் 60 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஸ்டப்ஸ் தனது பங்குக்கு 21 ரன்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 112 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.
19-வது ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும் (4 சிக்சர்கள், 12 பவுண்டரிகள்) சுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் (7 சிக்சர்கள், 3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.