ஒட்டாவா,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரி விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி வரி இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்துள்ளது.