
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 10-ந் தேதி ஸ்ரீதர் என்பவர் ராமேஸ்வரம் செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றின் முதலாம் வகுப்பு குளிர்சாத பெட்டியில் அமர்ந்து இருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், நான் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளேன். ஆனால், அதற்கான பணம் என்னிடம் இல்லை. நீங்கள் ஜீ-பே மூலம் பணம் கொடுத்தால் நான் திருப்பி கொடுத்துவிடுவேன் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஸ்ரீதர், ஆன்லைன் மூலம் அந்த நபருக்கு ரூ.1,000 அனுப்பியுள்ளார். பணம் கிடைத்த சிறிது நேரத்தில் அந்த வாலிபர், தண்டவாளத்தில் குதித்து மற்றொரு நடைமேடையில் ஏறி தப்பி ஓடி விட்டார். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற ஸ்ரீதர், எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த விஷ்ணு (29) என்பவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வாலிபர் ஏற்கனவே, தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் போது, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து விஷ்ணுவை கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர்.