எல்லா வேலைகளையும் இந்தியிலேயே பேசி இந்தியிலேயே செய்யுங்க… சுற்றறிக்கை அனுப்பி ஊழியர்களை ‘நெருக்கும்’ தெற்கு ரயில்வே

1 month ago 14

சென்னை: இந்தி ஆதிக்கம், இந்தி திணிப்பு என இந்தியாவில் பல ஆண்டுகளாக பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல் வலுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியை இந்தியாவின் மொழி என்று அடிக்கடி ஒன்றிய பாஜ அரசு பேசி வருகிறது. குறிப்பாக ரயில்வே துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதையும் தமிழகத்துக்கான திட்டங்கள் மறுக்கப்படுவதையும் ஒன்றிய பாஜ அரசு கச்சிதமாக செய்து வருகிறது.

இதில் இந்தி மொழி திணிப்பு என்பது ரயில்வே துறையில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகளை பறிக்கிற வெளிப்படையான முயற்சி. தமிழகத்தில் இந்தி அறிந்தவர்கள், படித்தவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பட்ட சூழலில், வடமாநில ரயில்வே போர்டுகள் “இந்தி கட்டாயம்” என்று கூறுவது ஒருவகையில் தமிழர்களை ஒழித்துக் கட்ட துடிக்கும் நடவடிக்கைதான். இரு மொழித் திட்டம் அமலாக்கத்தில் உள்ள தமிழகத்தில் இந்தி அவசியம் என்று ரயில்வே அதிகாரிகள் நடைமுறைப்படுத்த முனைவது சட்ட விரோதம். ஏற்கனவே படிப்படியாக வட இந்தியர்களுக்கு மட்டும் ரயில்வேயில் வேலை என்று ஆகி விட்டது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என தென் இந்தியா முழுவதும் இந்திக்காரர்கள்தான் பணியில் இருக்கின்றனர். அதற்கு நகரங்கள் மட்டுமல்ல, கடைக்கோடியில் உள்ள ரயில்நிலையங்களும் தப்பவில்லை. அதனால் உள்ளூர் பயணிகள் ரயில்வேயில் இருந்து இந்தி தெரியாமல் உதவி பெறுவது கடினமாகி விட்டது. பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்றாலும் ‘ஏக் டிக்கெட் கிவ்… தோ டிக்கெட் கிவ்’ என்று இந்தி, இங்கிலீஷ் கலந்து பேச வேண்டிய நிலைமை. ‘எந்த ரயில் எந்த நடைமேடையில் எத்தனை மணிக்கு வரும்’ என்பதை கேட்பது என்றால் தமிழ்நாடு மக்கள் படும் சிரமத்துக்கு அளவேயில்லை.

“ரயில்வேயில் தமிழருக்கு இனி இடமில்லை” என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரயில்வேயில் எஞ்சியிருக்கும் தமிழ்நாட்டுக்காரர்களும் ரயில்வேயில் இருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இந்திக்காரர்களிடம் வேலை வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர். இந்த நிலைமையில், தற்போது தெற்கு ரயில்வேயானது, அனைத்து ஊழியர்களுக்கும் இந்தி கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் அனைத்து ரயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியிலே, வேலை இடங்களில் பேச சொல்லுங்கள்..அனைத்து மேற்பார்வையாளர்களும் இதனை ஊக்குவிக்க வேண்டும், ஊழியர்கள் பணியின்போது இந்தியில் பேச பயிற்சி பெற வேண்டும். யார் இந்தி மொழி கற்றுக் கொண்டு சிறப்பாக வேலை செய்கிறார்களோ, இந்தி தினக் கொண்டாடத்தின் பொது கவுரவிக்கப்படுவார்கள்” என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்களுக்கு எப்படி இந்தியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, ஊழியர்கள் வேலைக்கு வரும்போதும், போகும்போதும் வருகை பதிவேட்டில் இந்தி மொழியில் பெயர், அவர்களின் பதவி போன்றவற்றை எழுத வேண்டும். மற்ற பதிவுகளை இந்தியில் எழுத வேண்டும். விடுப்பு மற்றும் குறிப்புகளை இந்தி மொழியில் கடிதமாக கொடுக்க வேண்டும். ரயில்களின் நேரம், செயல்பாடுகளை கூட இந்தியில் எழுத வேண்டும்.

அதே போல் ஓவ்வொரு ரயில் நிலையத்திலும், ஒரு நாள் ஒரு வார்த்தையை இந்தியில் எழுத வேண்டும். ரயில் நிலைய பலகைகளில் நிச்சயம் இந்தி மொழி இருக்க வேண்டும். அன்றுஅன்றைய வேலையை முடித்துவிட்டு அதனை கணினியில் பதிவேற்றும்போது இந்தியில் இருக்க வேண்டும். இவ்வாறு செய்ய ஊழியர்களை நிர்பந்திக்க வேண்டும். ஊழியர்கள் இந்தி மொழியில் செய்யும் பணிகளை சூப்பர்வைசர்கள் கண்காணித்து அந்த பணிகளை இந்தியில் பதில் கொடுக்க வேண்டும், என தெற்கு ரயில்வே வெளிப்படையாக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த நிர்பந்தம் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.

அனைத்திலும் இந்திதான் ஒளிர்கிறது
* சென்னை சென்ட்ரல், எழும்பூர் என தமிழ்நாட்டில் உள்ள ரயில்நிலையங்களில் அறிவிப்புகள் முதலில் இந்தி, அடுத்து ஆங்கிலம், கடைசியாக தமிழில் வெளியாகின்றன. ரயில் வருகை, புறப்பாடு விவரங்களை சொல்லும் மின்னணு பலகைகளிலும் இந்தியில்தான் முதலில் அறிவிப்பு ஒளிர்கிறது.
* ரயில்வே சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளிலும் இந்திக்குதான் முதலிடம். ரயில்வே ஊழியர்கள் அணியும் அடையாள அட்டை, அதை இணைக்கும் கயிறு ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மட்டும்தான்.
* பயணிகளிடம் புழங்கும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணச்சீட்டு பரிசோதகர்களின் சட்டையில் உள்ள பெயர் வில்லைகளிலும் இந்தி, ஆங்கிலம் இருக்கிறது. சிலர் இந்தியில் மட்டுமே அணிகின்றனர்.
* வந்தேபாரத், தேஜாஸ், அந்தியோதயா, உதயன் என அறிமுகமான ரயில்களுக்கும் இந்தியில்தான் பெயர். இதற்கு ரயில் பெட்டி கூட விலக்கல்ல. சாதாரண ரயில் பெட்டிகளுக்கு தீனதயாள் உபாத்யா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

The post எல்லா வேலைகளையும் இந்தியிலேயே பேசி இந்தியிலேயே செய்யுங்க… சுற்றறிக்கை அனுப்பி ஊழியர்களை ‘நெருக்கும்’ தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Read Entire Article