
சென்னை,
மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, கோகுலம் சிட்பெண்ட், நீலாங்கரை இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.