
யாங்கன்,
மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே கடந்த மார்ச் 28-ந்தேதி மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை உடனடியாக அரசு பிறப்பித்தது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து, ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சையளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவசரகால சிகிச்சை துறையும் தயாரான நிலையில் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் நடந்தன. அணை ஒன்றும் உடைந்து உள்ளது. இதனால், நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளுக்குள் நீர் புகும் ஆபத்தும் ஏற்பட்டது.
இந்நிலையில், நிலநடுக்கத்திற்கு 3,354 பேர் பலியாகி உள்ளனர். 4,508 பேர் காயமடைந்து உள்ளனர். 220 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும், பலருக்கும் புகலிடம் எதுவும் இல்லை. இதனால், அவர்கள் தூங்குவதற்கும் போதிய வசதி இல்லை. வீடுகளை இழந்து பலரும் தவித்து வருகின்றனர்.
நிவாரண பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போரால் மியான்மர் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில், தகவல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்நாட்டில், ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்து உள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என்றும் ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.