எம்பிபிஎஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கோரிய மனு தள்ளுபடி

1 month ago 5

புதுச்சேரி, அக். 17: தாயின் பூர்வீகத்தை அடிப்படையாக கொண்டு எம்பிபிஎஸ் தேர்க்கைக்கு தாழ்த்தப்பட்ட பிரிவுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி கோரிய மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீநிஜா என்ற மாணவி தாக்கல் செய்த மனுவில், எனது தந்தை சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர். எனது தாய் புதுச்சேரியை சேர்ந்தவர். நான் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவள். நாங்கள் இந்து ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். புதுச்சேரி அரசு நடத்திய 10ம் வகுப்பு தேர்வில் 98 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களையும் பெற்றுள்ளேன். நீட் தேர்தவில் 385 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.

இந்த நிலையில் எம்பிபிஎஸ் படிப்பிற்காக எனக்கு பொது பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. எனது தந்தை சென்னையை சேர்ந்தவர் என்பதால் கலந்தாய்வில் பொதுப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. எனது தாய்க்கு புதுச்சேரி பூர்விகம் என்பதால் அதன் அடிப்படையில் ‘குடிபெயர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவு’ என்று எனக்கு வில்லியனூர் தாசில்தார் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதனால் எனக்கு தாழ்த்தப்பட்ட பிரிவில் இடம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். அந்த பிரிவிற்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்டாக் சார்பில் புதுச்சேரி கூடுதல் அரசு பிளீடர் வி.வசந்தகுமார் ஆஜராகி, மனுதாரருக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் செய்யவில்லை. சேர்க்கைக்கான இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு ஒதுக்கீடு குறித்து கோர முடியாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, எம்பிபிஎஸ் படிப்பிற்கான சேர்க்கை இறுதி தகுதி தேர்வு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும்.

இறுதி சேர்க்கை பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டவுடன் எந்த விண்ணப்பத்தையும் ஏற்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் இதேபோன்று கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும். மனுதாரருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post எம்பிபிஎஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article