*வேளாண் அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும்
*விவசாயிகள் வேண்டுகோள்
கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் ஆற்று படுகைகளில் காலம் காலமாக பயிரிடப்பட்டு வந்த மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி காலப்போக்கில் குறைந்து போனது. தற்போது 2000 ஏக்கரில் இருந்து 100 ஏக்கராக மாறி வருகிறது, எனவே வேளாண் அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி, நாணல்படுகை, நாதல்படுகை, கீரங்குடி, மாதிரவேளூர் உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோர படுகை கிராம பகுதிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் காலம் காலமாக மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி நடைபெற்று வந்தது.
ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தது போல் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் போனதாலும் கொள்ளிடம் ஆற்று நீர் உப்புநீராக மாறியதாலும் விவசாயிகள் சாகுபடி செய்த மரவள்ளி கிழங்குகளை விற்பனை செய்ய முடியாமல், பயிரிட்ட விவசாயிகளே பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு போதிய அளவுக்கு விற்பனை நடைபெறாமல் நஷ்டம் ஏற்பட்டதாலும் காலப்போக்கில் மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி பரப்பளவு மிகவும் குறைந்து போய் உள்ளது.
ஒரு ஏக்கர் கரும்புப் பயிருக்குத் தேவையான நீரைக்கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய முடியும். இது ஓராண்டுப் பயிர். தமிழகத்திலும் கேரளத்திலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தொழிற்சாலை மூலப்பொருளாகவும் உணவாகவும் மரவள்ளி பயன்படுகிறது. வறட்சியைத் தாங்கி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவைத் தரும் பயிராக உள்ளது. அதனால், மரவள்ளிக் கிழங்கை மண்ணுக்குள் இருக்கும் வைரம் என்கிறார்கள்.
மரவள்ளிக் கிழங்கின் விலை சீராக இருப்பதில்லை. ஒரு டன் கிழங்கு விலை ரூ.3000 முதல் சில நேரம் ரூ.10,000 வரை விற்கும். இதில் ஆதாயம் பெறுவோர் பெரும்பாலும் இடைத்தரகர்களே. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மணற்பாங்கான நிலப்பகுதியாக இருந்து வரும் நிலையில் விவசாயிகள் இப்பயிர் சாகுபடியை குறிப்பிட்ட நிலப்பரப்பில் தீவிரமாக செய்து வந்தனர். அவர்கள் விரும்பியது போல் குறிப்பிட்ட லாபமும் கிடைத்து வந்தது.
இதன் இலைகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது. பருவமழை காலத்தின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மரவள்ளி கிழங்கு சாகுபடி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருந்தால் இதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமாகவே இருந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோர படுகை கிராமங்களில் பயிரிடப்பட்டு வந்த மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடி கடந்த 10 வருடங்களாக குறைந்து விட்டது.
சுமார் இரண்டு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு வந்த இந்த மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி வெறும் 100 ஏக்கரில் கூட பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் மரவள்ளி கிழங்கு சாகுடி விவசாயிகளுக்கு மானியம் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கி மரவள்ளி கிழங்கு சாகுபடியை வேளாண் அதிகாரிகள் மூலம் அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்படி செய்தால் மீண்டும் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியை தொடர்ந்து தொய்வின்றி செய்ய முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
The post கொள்ளிடம் ஆற்று படுகையில் 2000ல் இருந்து 100 ஏக்கராக குறைந்த மரவள்ளிக்கிழங்கு சாகுபடி appeared first on Dinakaran.