ரசாயன நீர் கலப்பதால் பச்சை நிறமாக மாறிய கொள்ளிடம் ஆற்று நீர்

8 hours ago 1

*கிராம மக்கள் அச்சம்

கொள்ளிடம் : கொள்ளிடம் ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியதால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திர பள்ளி கிராமத்திலிருந்து வடரங்கம் கிராமம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்று நீர் கடந்த ஒரு வார காலமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை இதுவரை அமைக்கப்படாததால் மாதிரவேளூர் கிராமம் வரை ஆற்றுநீர் உப்பு நீராக மாறி உள்ளது.

பருவ மழை காலத்தின் போதும் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் வெளியேற்றும் போதும் கொள்ளிடம் ஆற்றிநீர் நல்ல நீராக இருந்து வருகிறது. டிசம்பர் மாதம் வரை ஆற்று நீர் நல்ல நீராக இருந்து வருகிறது.

அதன் பிறகு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படுவதால் கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் கடலில் சாதாரணமாக ஆற்றுக்குள் புகுந்து உப்புநீராக மாறிவிடுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல ஆற்றில் உள்ள உப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக கடந்த ஐந்து நாட்களாக பச்சை நிறமாக மாறி உள்ளது. இதனை பார்த்த ஆற்றின் கரையோர கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் அவர்களின் கால்நடைகளை ஆற்றின் கரையோரம் உள்ள மேய்ச்சல் தரைகளில் மேய்வதற்காக ஓட்டி செல்கின்றனர்.

அப்போது ஆற்றின் சில பகுதிகளில் பள்ளம் போன்ற இடங்களில் ஆற்று நீர் குறைந்த அளவு உப்பு நீராக இருந்து வருகிறது. ஆனால் கால்நடைகள் தாகத்தால் உப்பு நீரையே குடித்து தாகத்தை தணித்து வருகின்றன.

தற்போது கடந்த ஒரு வார காலமாக ஆற்று நீர் வழக்கத்திற்கு மாறாக பச்சை நிறமாக மாறி உள்ள நிலையில் கால்நடைகள் இந்த நீரை அருந்தி வருகின்றன. இதனால் ஏதாவது ஆடு மாடு உள்ளிட்ட விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ரசாயனம் கலந்த நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நான் இப்படி தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளது. இதில் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. எனவே இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post ரசாயன நீர் கலப்பதால் பச்சை நிறமாக மாறிய கொள்ளிடம் ஆற்று நீர் appeared first on Dinakaran.

Read Entire Article