கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி மகசூல் 50 சதவீதம் சரிந்தது

8 hours ago 2

*குளிர்பதன கிடங்கு அமைக்க எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி மகசூல் 50 சதவீதம் சரிந்துள்ள நிலையில், அரசு சார்பில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், காவேரிப்பட்டணம், பர்கூர், ராயக்கோட்டை, ஊத்தங்கரை, தளி, அஞசெட்டி, உரிகம், ராயக்கோட்டை, வேப்பனஹள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 லட்சத்திற்கு மேல் புளிய மரங்கள் உள்ளது. ஒவ்வொரு மழையை பொருத்து புளி மகசூல் இருக்கும்.

குறிப்பாக ஆண்டிற்கு குறைந்தது 5 ஆயிரம் டன் முதல் 10 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி கிடைக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை சந்தைக்கு புளி விற்பனைக்காக விவசாயிகள், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள புளி மண்டிகளுக்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் கொண்டு வருவது வழக்கம்.

இதே போல் கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையோர கிராமங்களில் இருந்தும் விவசாயிகளை புளியை, கிருஷ்ணகிரியில் உள்ள புளி மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.இந்த புளி மண்டிகளுக்கு உள்ளுர் வியாபாரிகள் முதல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.

புளியின் ரகத்துக்கு ஏற்ற மாதிரி விலை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில், இவ்வாண்டு புளி மகசூல் 50 சதவீதம் குறைந்துள்ளதால், கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இங்கு வரும் புளியை நம்பி ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்த பெண் தொழிலாளர்கள் புளியை நசுக்கி கொட்டையை எடுத்து, அதை தரத்திற்கு ஏற்ப பிரித்து கொடுக்கின்றனர். குடிசை தொழிலாக இதனை செய்வதால் தினமும் வீட்டில் இருந்த படியே சுமார் ₹250 வரை சம்பாதிக்கின்றனர்.

இதனால் இவர்களின் வாழ்வாதாரமான புளியின் மகசூல் தற்போது குறைந்துவிட்டதால், விலையும் அதிகமாகி உள்ளதால் இவர்களின் வேலைவாய்ப்பும் குறைய வாய்ப்புள்ளது. வருடம் முழுவதும் புளி கிடைத்தால் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரம் சீராக இருக்கும். இதுகுறித்து கிருஷ்ணகிரி புளி வியாபாரிகள் சங்கத்தலைவர் கோவிந்தராஜ் மற்றும் விவசாயிகள் கூறியது: இந்தியாவின் மிகப்பெரிய புளி சந்தையான ராஞ்சிக்கு அடுத்து கிருஷ்ணகிரியில் கூடும் சந்தை தான் மிகப்பெரிய புளி சந்தையாகும்.

கிருஷ்ணகிரியில் சந்தை விலையை வைத்து தான் ராஞ்சி மற்றும் ஜபல்பூர் புளி சந்தைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மரங்களில் 80 சதவீதம் மகசூல் இருந்தது. புளி சாகுபடிக்கு பருவ மழையே போதுமானது. ஆனால், இவ்வாண்டு மழை பொழிவு குறைந்ததால் புளி மகசூல் 40 முதல் 50 சதவீதம் மட்டுமே உள்ளது.

இதனால் வழக்கத்தைவிட புளி விலை உயர்ந்துள்ளது. கொட்டை புளி தரத்தை பொருத்து கிலோ ரூ.50 முதல் 60 வரையிலும், கொட்டை நீக்கிய புளி தரத்தை பொருத்து கிலோ ரூ.110 முதல் 130 வரையிலும், கறி புளி கிலோ ரூ.140 முதல் 180 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு மகசூல் அதிகரித்து விலை சரிந்தது. தற்போது மகசூல் குறைந்து, விலை உயர்ந்துள்ளது. விலை குறையும் போது அதனை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் அரசு சார்பில் குளிர்பதன கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி மகசூல் 50 சதவீதம் சரிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article