
சென்னை,
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் 'ஓகே கண்மணி', 'நாய் சேகர்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீப காலமாக நடிகை பவித்ரா லட்சுமி பற்றிய வதந்திகள் பல இணையத்தில் பரவி வருகின்றன. அதாவது, அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நடிகை பவித்ரா லட்சுமி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் எடை மெலிந்தது குறித்தும், என் உடலமைப்பு மாறியது குறித்தும் நிறைய வதந்திகள் பரவுகின்றன. உண்மையில் கடுமையான ஒரு உடல்நல பாதிப்புக்கான சிகிச்சையில் நான் இருக்கிறேன். உண்மையிலேயே என் மீது கரிசனமும், அன்பும் கொண்டு என்னைப் பற்றி விசாரித்தவர்களுக்கு நன்றி.
என்னைப் பற்றி மீடியாக்களும், ஊடகங்களும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். எனக்கும் வாழ்க்கை இருக்கிறது. நானும் என்னுடைய எதிர்காலத்தை வழிநடத்த வேண்டும். வதந்திகளைப் பரப்பி என்னுடைய கடினமான சூழ்நிலையை மேலும் கடினமாக்கி விடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.