மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்காக மெகா ஏலம் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
கடந்த ஐ.பி.எல் தொடரை கேப்டனாக வென்ற அவர் இந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆசை தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற பிறகு ஒரு அதிசயமான உணர்வு எனக்குள் இருக்கிறது. இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு அணியாக நாங்கள் மிகப்பெரிய உழைப்பை வெளிப்படுத்தி உள்ளோம். மிகக் கடினமான இந்த தொடரில் அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். சையது முஷ்டாக் அலி தொடரை வெற்றிகரமாக முடித்து இருக்கிறோம்.
என்னுடைய அடுத்த இலக்கு பஞ்சாப் அணிக்காக ஐ.பி.எல் கோப்பையை வெல்வது தான். பஞ்சாப் அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க காத்திருக்கிறேன். ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து வேலை செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அடுத்த சில ஆண்டுகளுக்கு பஞ்சாப் அணியுடன் இணைந்து இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.