கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

3 hours ago 1

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது நித்திய கல்யாணி அம்மன் சமேத வில்வவன நாதர் கோவில். சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை விக்கிரம பாண்டியன் அமைத்ததாகவும், தொடர்ந்து நாயக்கர்கள் உள்ளிட்டோர் பராமரித்து வணங்கி வந்ததாகவும் வரலாறு.

இந்தக் கோவிலில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 2-ம் தேதி முதல் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. ஐந்து கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை ஆறாம் கால யாகபூஜையைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விமானம் மற்றும் ராஜ கோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வில்வ வனநாதர் மற்றும் நித்ய கல்யாணி அம்பாளுக்கு மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கடையம், கீழக்கடையம், முதலியார்பட்டி, புலவனூர், சேர்வைகாரன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

Read Entire Article