இந்த வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது சகோதரிக்கு சமர்ப்பிக்கிறேன் - ஆகாஷ் தீப் உருக்கம்

3 hours ago 1

பர்மிங்காம்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் (24 ரன்), ஹாரி புரூக் (15 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான ஆட்டம் நேற்று நடைபெற்றது. தோல்வியில் இருந்து தப்பிக்க வேண்டிய நெருக்கடியுடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ் தீப் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில் இந்த வெற்றியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரிக்கு சமர்ப்பிப்பதாக ஆகாஷ் தீப் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் வெற்றிக்கு பின் அவர் அளித்த பேட்டியில், "இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. என் சகோதரி (அக்கா) கடந்த இரண்டு மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இப்போது நலமாக இருக்கிறார். அவர் என்னுடைய ஆட்டத்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன். இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்க விரும்பினேன்" என்றுக் கூறினார்.

அத்துடன் இந்த பேட்டி வாயிலாக தனது சகோதரிக்கு ஸ்பெஷல் மெசெஜ் ஒன்றையும் அவர் கூறியுள்ளார்.

அதில், "இது உனக்காக. நான் பந்தை என் கையில் வைத்திருக்கும் போதெல்லாம், உன் முகம் என் மனதில் இருந்தது. உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம்" என்று கூறினார்.

Read Entire Article