ஜெய்ப்பூர் : எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் ‘ஆபரேஷன் சிந்தூரை’ குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால், மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது. பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
பாகிஸ்தான் 9 பயங்கரவாதி முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கரவியூக தாக்குதலால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது; ராணுவத்தின் தீரத்தால் பாகிஸ்தானுக்கு நாம் பதிலடியை கொடுத்திருக்கிறோம் .மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை; ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசுவோம். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம்,”இவ்வாறு பேசினார்.
The post எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது : ‘ஆபரேஷன் சிந்தூரை’ குறிப்பிட்டு பிரதமர் மோடி ஆவேசம் appeared first on Dinakaran.