எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்..!!

1 day ago 4

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இன்று வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க் கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால், பாஜக கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று வக்ஃபு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. முதலில் கேள்வி நேரம் நடந்தது. கேள்வி நேரத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை தாக்கல்செய்ய அனுமதி வழங்கினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு நடுவே வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அதன்பிறகு வக்ஃபு வாரிய திருத்த மசோதா தொடர்பான விவாதம் என்பது தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து திருத்தங்களையும் கூட்டுக்குழு நிராகரித்துவிட்டது என்றும், வக்ஃபு சொத்துகளை கையகப்படுத்தும் நோக்கத்திலேயே மசோதா கொண்டு வரப்படுவதாகவும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. இதையடுத்து கச்சத்தீவு விவகாரம் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. இந்த விவாதத்தை தொடர்ந்து வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட உள்ளது.

The post எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article