விழுப்புரம்,
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 நாள் மாநில மாநாட்டின் நிறைவு நாளான நேற்று கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரண ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பது என்பது மோசமானது. மாநில மாநாட்டில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படும்போது, என்ன செய்வது? எப்படி பார்ப்பது? காவல்துறை அவசரகால நிலை போல்தான் செயல்படுகிறது. அதைத்தான் கூறினேன்.
அனுமதி கேட்டு கொடுத்தால் பரவாயில்லை, அனுமதி கொடுக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? எல்லா கட்சிகளுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதி கொடுக்க வேண்டும். இது ஜனநாயக உரிமை. இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்.
எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது என்பது ஆளும் கட்சிக்குத்தான் அவப்பெயர். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.