எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றம்: அடுத்ததாக ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர்

15 hours ago 2

டெல்லி: எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், பிப். 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பிப். 13ம் தேதியுடன் முதல் அமர்வு நிறைவுபெற்றது. தொடர்ந்து மார்ச் 10ம் தேதி இரண்டாம் அமர்வு தொடங்கியது. நேற்றுடன் தேதி குறிப்பிடாமல் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நடந்து முடிந்த கூட்டத் தொடரில் வங்கி சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ததற்கு இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. இறுதியாக வக்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் 12 மணிநேரத்துக்கு மேலாக விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக வருகின்ற ஜூலை மாதத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுடன் 2025ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் வக்பு திருத்த சட்ட மசோதா உட்பட 16 சட்ட மசோதாக்களை நிறைவேற்றின. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையின் அலுவல் சுமார் 118 சதவீதமாகவும், மாநிலங்களவையின் அலுவல் சுமார் 119 சதவீதமாகவும் இருந்தது.

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 26 அமர்வுகள் நடைபெற்றன. மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து 17 மணி நேரம் 23 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது; இதில் 173 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநிலங்களவையில் இந்த தீர்மானம் 21 மணி நேரம் 46 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது, இதில் 73 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இரண்டாவது கட்ட கூட்டத்தொடரில் ரயில்வே, ஜல் சக்தி மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள் குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. நிதி மசோதா – 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, ரயில்வே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் உள்துறை அமைச்சகங்களின் செயல்பாடு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானம் இரு அவைகளிலும் ஏப்ரல் 3, 4ம் தேதிகளில் நிறைவேற்றப்பட்டது.

வக்பு திருத்த சட்ட மசோதா, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, திரிபுவன் சஹகாரி பல்கலைக்கழக மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா ஆகியன நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 11 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்களவையில் 16 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன அல்லது திரும்ப அனுப்பப்பட்டன. இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 16 ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் டெல்லியில் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, கும்பமேளா உயிரிழப்பு, தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு, வக்பு சட்டம், அமெரிக்காவின் வரி விதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கோஷங்களை எழுப்பின என்பது குறிப்பிடத்தக்கது.

The post எதிர்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றம்: அடுத்ததாக ஜூலையில் மழைக்கால கூட்டத்தொடர் appeared first on Dinakaran.

Read Entire Article