முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

23 hours ago 4

தேனி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று, நேற்று முன் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி பஸ் நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளம் சாலை, மதுரை சாலையில் இருந்து நேரு சிலை சிக்னல் நோக்கி மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, அரண்மனைபுதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு பெரியகுளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவு தண்ணீரே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளக்கவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது. நேற்று முன் தினம் மாலை அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்றும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீரின் அளவை பொறுத்து சுற்றுலா பணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து தேனி மாவட்டத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதேபோல் கொடைக்கானல் மலைப் பகுதிகள், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன் தினம் 86 மி.மீ வரை மழை கொட்டியது. இதையடுத்து 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 155.77 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 81.34 அடி. நீர் திறப்பு 3 கனஅடி. நீர்இருப்பு 40.28 மில்லியன் கன அடி. ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 56.43 அடி. நீர்வரத்து வினாடிக்கு 180 கனஅடி. நீர் திறப்பு 72 கனஅடி. நீர் இருப்பு 2955 மில்லியன் கன அடி. உத்தமபாளையம் அருகே, 52.55 அடி உயரமுள்ள சண்முகநதி அணையின் நீர்மட்டம் 34.40 அடி. நீர்வரத்து 7 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 31.90 மில்லியன் கனஅடி. 152 உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.30 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 396 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 105 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் இருப்பு 1,442 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடி. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 85.48 மில்லியன் கன அடி. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் குறைவான அளவில் மழை பெய்து வந்தது. மேலும் வெயிலின் தாக்கமும் அதிக அளவில் காணப்பட்டது. அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் அதிக அளவில் மழை பொழிந்து வருகிறது. அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வருகிறது. மேலும் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன் விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல தொடர் மழையின் காரணமாக மேகமலை மற்றும் சின்னச்சுருளி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 

The post முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article