திருவொற்றியூர்: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரூ.28 கோடியில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வெள்ள நீர் தங்குதடையில்லாமல் செல்ல எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் முகத்துவாரம் முதல் வடசென்னை அனல் மின்நிலைய நுழைவாயில் வரை சுமார் 1.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வளத்துறை சார்பில் ரூ.28 கோடி செலவில் தூர்வாரி கரை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்த பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து, விரைவாக பணியை முடிக்க உத்தரவிட்டார். முன்னதாக, எண்ணூர் தாளங்குப்பம் கடற்கரை, மணலி புதுநகர் கொசஸ்தலை ஆறு ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார். மணலி இருளர் காலனியில் உள்ள 100 குடும்பங்களுக்கு அரிசி, பாய், பெட்ஷீட் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், தலைமை பொறியாளர் ஜானகி, கூடுதல் இணை தலைமை பொறியாளர் பொதுப்பணித்திலகம், ஆரணி ஆறு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா, பகுதி திமுக செயலாளர் புழல்நாராயணன், அருள்தாசன், கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரூ.28 கோடியில் தூர்வாரும் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.