
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா, கடந்த 2006-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். அப்போது பெங்களூரு வடக்கு தாலுகாவில் ஹார்டுவேர் பூங்கா அமைக்க கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த நிலம் அரசாணையில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி எடியூரப்பா மீது பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு கோர்ட்டு, எடியூரப்பாவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கீழமை கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, எடியூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை அறிவித்தது. இதில் இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.