
சென்னை,
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜாக்டோ ஜியோ ஒருங்கினைப்பாளர்கள் மாயவன், காந்தி ராஜன், சுரேஷ், வெங்கடேசன், ஆகியோர் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று திமுக உறுதி அளித்தது. ஆனால் 4 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த கோரிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழக அரசு நேற்றைய தினம் 4 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் 2 அரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, எங்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தினோம். கடந்த காலங்களில் நாங்கள் போராடும்போது எங்களின் தோள்மீது கைப்போட்டு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது எங்களது கோரிக்கைக்கு மதிப்பளிக்கவில்லை. நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் வருகிறார்.அவரிடம் பேசிவிட்டு கோரிக்கையை தெரிவிக்கிறோம் என்று அமைச்சர்கள் கூறினார்கள். அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வந்தார்கள். அமைச்சர்கள் எங்களை அழைத்துபேசுவார்கள் என்று நினைத்தோம் ஆனால் எங்களை அழைக்கவும் இல்லை, எங்களிடம் பேசவும் இல்லை. இதுபோன்ற மோசமான வஞ்சிக்கின்ற செயலை, நம்பிக்கை துரோக செயலை இந்தியாவிலேயே எந்த முதல்-அமைச்சரும் செய்யவில்லை.
இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதியை 4 ஆண்டுகள் நிறைவேற்றாத ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் எங்களை உதாசீனம் செய்கிறார். எங்களை ஏமாற்றினால் நிச்சயமாக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு ஏமாந்து போகும். தமிழக அரசு 4 வாரம் எங்களிடம் அவகாசம் கேட்பது, எங்களை பிளவுபடுத்தி ஏமாற்றுவதற்காகத்தான். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் என்ன செய்தார்கள்? எங்களது ஆவேசம் போராட்டமாக வெடிக்கும். அப்போது யார் யார் தலை உருளும் என்று எங்களுக்கு தெரியாது. அடுத்தக்கட்ட போராட்டமாக முழுநேர வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து எங்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.