புதுடெல்லி: ஊழல் என்பது மோசடியுடன் நின்றுவிடுவதில்லை என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார். லோக்பால் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘உண்மையான ஜனநாயக ஆட்சி நடக்கும் போது, மக்களிடையே குறைவான போராட்டமும், குறைவான இடையூறுகளும் இருக்கும். அமைதியும் நல்லிணக்கமும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கின்றன. ஜனநாயக ஆட்சியின் கீழ் முன்னேற்றம் என்பது மெதுவாக இருக்கலாம். ஆனால் ஜனநாயக செயல்முறையின் தாக்கம் ஆழமாக இருக்கும்.
ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். இதனால் ஜனநாயகமும் மக்களின் நம்பிக்கையும் குறையாது. ஊழலுக்கு எதிரான இயக்கம் இருக்க வேண்டும். இது தான் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக பார்க்கப்படுகிறது. ஆட்சி அதிகாரங்கள் யாவும் சமூகத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், ஊழலுக்கு எதிரான பணிகள் ஜனநாயக முறையில் செய்யப்பட வேண்டும். லோக்பால் அமைப்பை போன்று நாட்டில் பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் யாவும் முறையாக செயல்பட வேண்டுமானால், நல்ல மற்றும் பொறுப்பான நபர்கள் தேவை. நாட்டில் ஊழல் என்பது மோசடிகளுடன் நின்றுவிடுவதில்லை. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஊழல் போன்ற கடுமையான பிரச்னையைச் சமாளிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிக்கலான பிரச்னையைச் சமாளிக்க, தடயவியல் மற்றும் இணைய வசதிகளின் நிபுணத்துவம் மற்றும் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிபிஐ, சிவிசி போன்ற நிறுவனங்கள் நீதிமன்றத்துடன் இணைந்து செயல்படுகின்றன’ என்று கூறினார்.
The post ஊழல் என்பது மோசடியுடன் நின்றுவிடுவதில்லை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன.! சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.