ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மேவளூர்குப்பம் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்யாமல் ரூ.3.75 கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது கலெக்டருக்கு புகார்கள் சென்றுள்ளன. அதன் அடிப்படையில் மாவட்ட திட்டக்குழுவை சேர்ந்த மகளிர் திட்ட இணை இயக்குநர் பிச்சாண்டி, திட்ட அலுவலர்கள் உமாசங்கர், பானுமதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஊராட்சி பணிகள் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராஜேஷுக்கு சொந்தமான ஷிஸி குரூப்ஸ் நிறுவனத்திற்கு எந்த ஒரு டெண்டரும் விடாமல் நேரடியாக பரிவர்த்தனை செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரை மற்றும் போலியாக தயார் செய்யப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி அங்குள்ள தொழிற்சாலைகளை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், மேவளூர்குப்பம் ஊராட்சியில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கேட்பதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராஜேஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஆதாரத்துடன் மேவளூர்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த நபர் காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார் அளித்த நிலையில் தற்போது மாவட்ட திட்ட குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஊராட்சி தலைவர் மீது முறைகேடு புகார் மேவளூர்குப்பம் ஊராட்சியில் மாவட்ட திட்ட குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.