சென்னை,
அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 28மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த சூழலில் 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்ட ஊரக உள்ளாட்சிகள் பதவிக் காலம், 2026 செப்., மாதம் முடிவடைகிறது.
இந்த நிலையில் பதவிக்காலம் முடிய உள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.