*ராசா எம்.பி. பேட்டி
ஊட்டி : ஊட்டியில் ரூ.81 கோடியில் சுற்று வட்ட சாலை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என நீலகிரி எம்பி ராசா தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சார்பில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், நீலகிரி, கோயமுத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலைஞர் கனவு இல்ல திட்டம், பசுமை வீடுகள் திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதான் மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தூய்மை இந்தியா திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் எம்பி ராசா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள், முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் நிலுவையிலுள்ள பணிகள் ஆகியவை குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 98 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஓரிரு பணிகள் ஒரு சில தடையாணைகள் காரணமாக நிலுவையிலுள்ளது. அதனை எவ்வாறு முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். ஊட்டி நகருக்கு மாற்றுப்பாதை திட்டமான லவ்டேல் முதல் பிங்கர்போஸ்ட் சாலைப்பணிகள், சுற்றுவட்டச் சாலை சுமார் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு புதிய திட்டமான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், உதகை நகராட்சி மூலம் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்டமாக ஊட்டி மார்க்கெட்டில் 450 கடைகள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 239 கடைகள் கட்டுமான பணிகள் உதகை நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இவையிரண்டும் இந்தாண்டே முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு இன்னும் பல திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதகை நகருக்கு மாற்றுப்பாதை திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும்போது உள்ளூர் வியாபாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரமும் அதிகரிக்க செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் கௌசிக், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம், வெங்டேஷ் பிரபு (கூடலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், மகளிர் திட்ட இயக்குநர் காசிநாதன், முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், உதவி இயக்குநர்கள் முகமத் ரிஸ்வான் (பேரூராட்சிகள்), சரவணகுமார் (ஊராட்சிகள்), கூடலூர் நகராட்சித்தலைவர் பரிமளா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (எ) மாதன், சுனிதா நேரு (குன்னூர்), கீர்த்தனா (கூடலூர்), ராம்குமார் (கோத்தகிரி), ஊட்டி நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post ஊட்டியில் ரூ.81 கோடியில் சுற்று வட்ட சாலை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.