ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மலர் அலங்காரங்களில் வாடிய மலர்கள் அகற்றப்பட்டு புதிய மலர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவின் ஒருபகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 15ம் தேதி மலர் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில், இரண்டு லட்சம் மலர்களால் ஆன பழங்கால அரசர் அரண்மனை அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் அரியணை, கோட்டை நுழைவு வாயில், படகு உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. இந்த மலர் அலங்காரங்கள் கொய்மலர்கள் மற்றும் சாமந்தி மலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மலர் கண்காட்சி துவங்கி 7 நாட்கள் முடிந்த நிலையில் இந்த அலங்காரங்களில் உள்ள மலர்கள் வாடா துவங்கின. மேலும், வரும் 25ம் தேதி வரை மலர்கண்காட்சி நடக்கும் நிலையில், வாடிய மலர்களை அகற்றிவிட்டு புதிய ரோஜா மலர்கள் கொண்டு மலர் அலங்காரங்களை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டை நுழைவாயில், சிம்மாசனம் போன்ற அலங்காரங்களில் தற்போது புதிய மலர்கள் பதிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாடிய மலர்கள் அகற்றம்: மலர் அலங்காரத்தில் புதிய மலர்கள் சேர்ப்பு appeared first on Dinakaran.