ஊட்டி தாவரவியல் பூங்காவில் 4வது நாளாக மலர் கண்காட்சி களை கட்டியது: ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

2 hours ago 2

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 4வது நாளாக கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மலர் அலங்காரங்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி கடந்த 15ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் துவங்கியது.

கண்காட்சியை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பல்வேறு வண்ண மலர்களால் ஆன 5க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் சுமார் 7 லட்சம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு சோழ மன்னர்களின் சிறப்பை விளக்கும் பொன்னியின் செல்வன் கோட்டை அலங்காரம், அரண்மனை நுழைவுவாயில் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்ன பறவை ரதம், பீரங்கி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலங்கார ேமடைகளில் கார்னேசன், ரோஜா மலர்கள், ஆந்தூாியம், ஆர்க்கிட் மலர்கள் வைக்கப்பட்டுள்ளது. இம்முறை 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இவற்றை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

வருகிற 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், விடுமுறை தினமான இன்று (ஞாயிறு) மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். பெரிய புல் மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். கண்காட்சி துவக்க நாளன்று 14 ஆயிரம் சுற்றுலா பயணிகள், இரண்டாவது நாள் 16,580 சுற்றுலா பயணிகள், நேற்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை பார்த்து ரசித்தனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் 4வது நாளாக மலர் கண்காட்சி களை கட்டியது: ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article