![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38066303-pannir-selvam.webp)
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவரையும் மிரட்டி அரசுப் பணிகளில் தலையிடுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். இந்த வகையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்தும் அரசுப் பணிகளில் அவர்களின் தலையீடு தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
தமிழ்நாட்டில், 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்ததையடுத்து, அந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தினைக் கவனிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி அலுவலகங்கள் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் தலையீடு அதிகரித்து வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, புதிய மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது என அனைத்திலும் பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும், தங்களைக் கேட்காமல் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் விளைவாக, தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம், சாலைப் பணிகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, தனி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்து, மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.