![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38081948-machakara-murugan.webp)
சென்னை வானகரத்தில் மச்சக்கார முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் வள்ளிதேவியை மணக்க முருகப்பெருமான் நடத்திய திருவிளையாடலுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது.
வேடர்குல தலைவனின் வேண்டுதல்
லவலீ மலை என்னும் பெயர் கொண்ட மலைப் பகுதியில் வனப்பகுதியும் சூழ்ந்திருந்தது. இந்த வனப்பகுதியில் வேடர்குல தலைவர் நம்பிராஜன் தன் இன மக்களுடன் வசித்து வந்தான். இறை சிந்தனையுடன் வாழும் நம்பிராஜனின் மனதில் ஒரு பெரும் கவலை குடிகொண்டிருந்தது. அது அவனுக்கு குழந்தைச் செல்வம் இல்லை என்பதுதான்.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்த நம்பிராஜன், மலை சூழ்ந்த பகுதியில், தாமரை மலர்கள் படர்ந்திருந்த தடாகத்தில் குளித்தான். குளத்தை விட்டு வெளியே வந்ததும், சூரிய பகவானை இருகரம் கூப்பி வேண்டினான். 'சூரிய பகவானே! நாங்கள் குடிகொண்டிருக்கும் இந்த மலையில் எல்லா வளங்களும் நிரம்பி இருக்கட்டும். இங்குள்ள உயிர்கள் எல்லாம் எந்த குறையும் இன்றி வாழ அருள்புரியுங்கள். அத்துடன் என் நீண்ட நாள் பிரார்த்தனையையும் கொஞ்சம் நிறைவேற்றி வையுங்கள். எனக்கு உள்ள ஒரே கவலையான, குழந்தைச் செல்வம் இன்மையை போக்கி அருளுங்கள்' என்று வேண்டினான். சூரியபகவானை வழிபடும் அதே நேரத்தில் சிவபெருமானையும், அம்பிகையையும் நெஞ்சில் நிறுத்தி துதித்து போற்றினான்.
பல நாட்களாக இறைவனை வேண்டி வழிபட்டு வரும்போது, அந்த வேண்டுதலுக்கு கட்டாயமாக பலன் உண்டு. அவ்வாறே அன்று நம்பிராஜனின் வேண்டுதலும் நிறைவேறியது.
வள்ளி அவதாரம்
ஆம்! அந்த வனத்தில் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவர் இறைவனின் உந்துததால் கண் விழித்தார். கண் விழித்ததும் அவரது பார்வை, எதிரில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த மானின் மீது பதிந்தது. முனிவரின் பார்வையால், அந்த மானின் வயிற்றில் இருந்து அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை, வள்ளிக்கிழங்கு கொடிகள் படர்ந்திருந்த இடத்திற்கு நடுவில் ஈன்றது. பிறந்த மழலை தன் இனத்தைச் சேர்ந்தது இல்லை என்றுணர்ந்த அந்த மான், அந்தக் குழந்தையின் நெற்றியில் அன்புடன் முத்தமிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றது.
புதர்களுக்கு நடுவில் கிடந்த குழந்தை வீறிட்டு அழுதது. அது நம்பிராஜனின் காதிலும் விழுந்தது. ஏற்கனவே குழந்தை பேறுக்காக ஏங்கியிருந்த அவன், மழலையின் அழுகுரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அங்கே வள்ளிக் கொடிகளுக்கு நடுவே தேவதையாய் ஜொலித்தபடி கிடந்தது ஒரு பெண்குழந்தை. அது, நம்பிராஜனின் முகம் பார்த்ததும் அழுகையை நிறுத்தியது. அவனை கண் இமைக்காமல் பார்த்தது. கால் உதைத்துச் சிரித்தது.
'ஆஹா.. என் பிரார்த்தனை பலித்து விட்டது. என் மனை விளங்க ஒரு மகாலட்சுமி கிடைத்து விட்டாள். பிள்ளை இல்லை என்ற குறை தீர்க்க வந்த குலமகள்' என்று மகிழ்ந்து அக்குழந்தையை வாரியெடுத்தான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் குடில் வந்து சேர்ந்தான். தன் குலத்தாருக்கெல்லாம் தகவல் சொல்லி விருந்து வைத்தான். அந்த அழகுக் குழந்தைக்கு 'வள்ளி' என்று பெயர் சூட்டினான்.
மச்சக்கார முருகன்
மலைராஜனின் மகளாய் வளர்ந்தாள் வள்ளி. காட்டில் வளர்ந்து கிடக்கும் கிழங்குகளும், தேனும், தினைமாவும் அவளை வளர்த்தது. காலம் அவளை மலரச் செய்தது. பன்னிரெண்டு வயது தொட்ட மகளை தினைபுனங்களில் காவல் காக்க அனுப்பினான் வேடர்குல வேந்தன்.
லவலீ என்னும் வள்ளி மலைக்கு வந்த நாரதர் வள்ளியைக் கண்டார். இவள் வேலனுக்கு மாலையிட வேண்டியவள் என்பதை, தன் தவ வலிமையால் உணர்ந்தார். 'முருகனை சந்தித்து வள்ளியை கரம்பிடிக்க வேண்டிய தருணம் கனிந்து விட்டது' என்று சொன்னார். அதன்படி முருகப்பெருமான் வள்ளிமலைக்கு வந்தார். வேடர்குல வள்ளி மீது மையல் கொண்டார்.
முதலில் ஒரு வயோதிகனாக வடிவெடுத்து வள்ளியை சீண்டி விளையாடினார். வள்ளி கோபமுடன் சீறினாள். கடுமையாக எச்சரித்தாள். மறுநாள் இளைஞனாக வடிவெடுத்து வந்தார். உடனே வள்ளி, "நேற்று வயோதிக வேடம்; இன்றைக்கு இளைஞனாக வந்து மயக்க பார்க்கிறீர்களா?'' என்று கேட்டாள். "எப்படி கண்டுபிடித்தாய் வள்ளி?'' என்று கேட்க, "வேஷம் போடும்போது இந்த மச்சத்தை மறைக்க வேண்டும் என்பது தெரியாதா?'' என்று கன்னத்தில் இடித்து விட்டு நகர்ந்தாள்.
வள்ளியை வளைக்க முடியாத முருகன், அண்ணன் விநாயகனை வேண்ட, யானையாய் வந்து வள்ளியை பயமுறுத்தித் துரத்தியதும், தன்னை காதலித்தவர் யார் என்ற உண்மை தெரிந்து வள்ளி கந்தனிடம் காதல் கொண்டதும், அதன் பின்பு வேடர்குல தலைவனின் மகளை முருகன் மணமுடித்ததும் நாம் அனைவரும் அறிந்த கதைதான்.
ஆனால், அன்று வள்ளியோடு விளையாட மச்சத்தோடு வந்த முருகன் அதே தோற்றத்தோடு சென்னை வானகரத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் என்பது சுவாமியின் திருநாமம். போரூர் ரவுண்டானாவில் இருந்து ஆற்காடு சாலையில் காரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடது பக்கம் சென்றால் போரூர் தோட்டம் தொழிற்பேட்டை உள்ளது. அதனருகில் உள்ள வானகரம் மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது இத்தலம்.
வடபழனிச் சித்தர்களின் ஆணைப்படி இங்கே முருகனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அப்படி கட்டப்பட்ட ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகன் விக்கிரகத்தின் கன்னத்தில் அபிஷேக வேளையின் போது சிவப்பு நிற மச்சம் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அனைவரும் பரவசமாகி இருக்கிறார்கள். அன்று முதல் இவர் 'மச்சக்கார முருகன்' என்ற பெயரோடு விளங்குகிறார்.
ஸ்ரீசக்கர விநாயகர்
ஆலயத்தின் நுழைவு வாசலைக் கடந்ததும், ஸ்ரீசக்கர விநாயகரை தரிசிக்கலாம். இந்த விநாயகரின் கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளார். இவரை வணங்கி மச்சக்கார முருகன் சன்னிதியை அடைய வேண்டும். இடுப்பில் கை வைத்தபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் முருகனின் கன்னத்தில் மச்சம் இருக்கிறது. அபய ஹஸ்தம் காட்டி நிற்கும் இந்த வேலனை, இரண்டு நெய்தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொண்டால், மூன்று மாதத்திற்குள் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கையாகும்.
அழகன் முருகனின் அழகை தரிசித்ததும், பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அவருக்கு அருகில் வானத்தீஸ்வரர், நாகர், கோபாலகிருஷ்ணர், விநாயகருடன் அரசும், வேம்பும் இணைந்திருக்கும் தனிச் சன்னிதிகளை வணங்கலாம். அதற்கு அடுத்தாற்போல் தனிச் சன்னிதியில் ஷீரடி சாயிபாபா வீற்றிருக்கிறார். அவருக்கு அருகில் சனீஸ்வரர். அடுத்து சீதா, லட்சுமண சமேதராக ராமபிரானும், அவருக்கு எதிர் திசையில் அனுமன் சன்னிதியில் அமையப்பெற்றுள்ளது. இவர்களின் அருள் பெற்று பைரவி சமேத ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வணங்கி நலம் பெறலாம். கடன் பிரச்சினை உள்ளவர்கள் இவரை வணங்க கடன் தொல்லை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இவர்களோடு அகத்தியர் தம் மனைவியுடன் இத்தலத்தில் கோவில் கொண்டு தம்பதிகளுக்குள் வரும் மன வருத்தங்களை நீக்கி அருள்கிறார். பைரவர் சன்னிதிக்கு அருகில் விஷ்ணு துர்க்கை தனிச் சன்னிதியில் இருக்கிறாள். ஆலயத்தின் பின்பக்கத்தில் கோசாலை என்ற பசுக்களின் காப்பகம் இருக்கிறது.