அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம்: 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்டு

2 hours ago 1

சென்னை,

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகள் விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக் கூடாது என்று சூரியமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இவரது கோரிக்கையை அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு விசாரித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதேபால, அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி இருந்தனர்.

இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதில், நீதிமன்றத்தைப் போல விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது. இந்த வழக்கிற்கு தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரவீந்திரநாத் சார்பில் ஆஜரான வக்கீல், "ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டு, எதிர் அணி ஒன்று உள்ளது என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தாலே, தாமாக முன்வந்து சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது'' என்று வாதிட்டனர். இதேபோல, பிற மனுதாரர்கள் தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி, விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், ''மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டால், சட்டத்துக்கு உட்பட்டுதான் தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும். மாறாக கோர்ட்டு போல, பலருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க முடியாது. அதுவும், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத நபர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சின்னம் தொடர்பான விவகாரத்தில், இல்லாத அதிகாரத்தை எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது. அதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி நோட்டீஸ் அனுப்பியதாக கூறிய தேர்தல் ஆணையம் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில், "கட்சியில் எந்த பிளவும் இல்லை; தனக்கான ஆதரவு நீடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்" என்று வாதிடப்பட்டது.

"கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது" என்று ரவீந்திரநாத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read Entire Article