உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு: அரசு பேருந்து டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய லாரி டிரைவர் கைது

18 hours ago 2

 

உளுந்தூர்பேட்டை, மே 10: சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் விநாயகமூர்த்தி (52) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற லாரி மீது பேருந்து லேசாக உரசியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர், பேருந்தின் முன்னால் சென்று வழிமறித்து பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தார்.பின்னர் திடீரென இரும்பு கம்பியால் அரசு பேருந்து டிரைவர் விநாயகமூர்த்தியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்ததால் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து டிரைவர் தப்பி ஓடினார். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார், படுகாயம் அடைந்த பேருந்து டிரைவர் விநாயக மூர்த்தியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு தாலுகாவை சேர்ந்த புருஷோத்தமன்(36) என்பது தெரியவந்ததை அடுத்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு: அரசு பேருந்து டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article