போபால்: ஷியோபூர் சோதனை தளத்திலிருந்து உளவு தகவல்களை சேகரிக்கக் கூடிய ஸ்ட்ராடோஸ்பெரிக் ஏர்ஷிப் பிளாட்ஃபார்மின் முதல் சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் பரிசோதனை மையத்தில் நேற்றிரவு ‘ஸ்ட்ராட்டோஸ்பெரிக் ஏர்ஷிப் பிளாட்ஃபார்ம்’ என்ற கருவியை வெற்றிகரமாக பறக்கவிட்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள வான்வழி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏர்ஷிப் பிளாட்ஃபார்ம் கருவி, பூமியில் இருந்து சுமார் 17 கி.மீ உயரத்தில் பறக்கும். பரிசோதனையின்போது, ஏர்ஷிப்பில் இருக்கும் சென்சார்களிலிருந்து தரவுகள் பெறப்பட்டது. காற்றை விட இலகுவான இந்த கருவி, இந்தியாவின் பரப்பை கண்காணிக்கும். உளவுத்துறை, கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும். உலகின் சில நாடுகளில் மட்டுமே இதுபோன்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் விஞ்ஞானிகளை பாராட்டினார். இந்த கருவி சோதனையானது, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் மத்தியில் நடந்துள்ளது. இந்த கருவியானது இந்தியாவின் ராணுவ கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவும் என்று டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன.
The post உளவு தகவல்களை சேகரிக்க கூடிய ‘ஏர்ஷிப்’ கருவி சோதனை வெற்றி: டிஆர்டிஓ-வுக்கு பாராட்டு appeared first on Dinakaran.