ராமநாதபுரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டு முன்விரோதத்தில் 11 பேர் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவர் பலியானார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராமநாதபிரபு (30). இவர் ராமநாதபுரம் அருகே தெற்குதரவை கிராமத்தில் திருமணம் முடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தெற்கு தரவை சென்ற அவர் உறவினர்களான சாத்தையா (55), அம்மன் கோயில் பழனிகுமார் (30), மாடன்வலசையை சேர்ந்த சிவா (35) ஆகியோரை தனது காரில் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் சாலையில் வந்தபோது, தருமபுரியை சேர்ந்த உப்பு லாரி மீது கார் லேசாக மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது காரின் பக்கவாட்டில் இருந்த பின்புறம் பார்க்கும் கண்ணாடி உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமநாதபிரபு, லாரி டிரைவர் கார்த்திக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த அம்மன்கோயிலை சேர்ந்த ஜமீன்ராஜா இருவரையும் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் ராமநாதபிரபுவிற்கும், ஜமீன்ராஜாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, ஜமீன்ராஜா, தனது தம்பிக்கு போன் செய்து வரும்படி அழைத்துள்ளார். அவர்கள் 3 டூவீலர்களில் வந்துள்ளனர். இதில் இரு தரப்பும் மோதிக்கொண்டனர். அப்போது ராமநாதபிரபுவை, உடன் வந்த சாத்தையா அங்கிருந்து கிளப்பி அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே ராமநாதபிரபுவிற்கும், அம்மன்கோயில் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆத்திரம் குறையாத ராமநாதபிரபு ராமநாதபுரம் பட்டினம்காத்தான் செக்போஸ்ட் வரை சென்றுவிட்டு, மீண்டும் வந்து அம்மன்கோயில் அருகே சாலையோரம் கும்பலாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார்.
இதில் சாத்தையா (55), பழனிக்குமார் (30), சிவா மற்றும் அம்மன்கோயிலை சேர்ந்த முத்துக்குமார் (19), மனோஜ் (24), பிரசாத் (23), ரித்திக்குமார் (19), தெய்வேந்திர சூர்யா (25), உதயபிரகாஷ் (21), சுதர்சன் (18), தீனதயாளன் (18) மற்றும் காரை ஓட்டி வந்த ராமநாதபிரபு ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் சாத்தையா, முத்துக்குமார், பழனிகுமார், சிவா, மனோஜ், பிரசாத், ரித்திக்குமார், தெய்வேந்திர சூர்யா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் சாத்தையா உயிரிழந்தார். சிவா உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மற்றவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட ராமநாதபிரபுவும் படுகாயம் அடைந்துள்ளதால், அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
The post ஆன்லைன் ரம்மி விளையாட்டு முன்விரோதம் 11 பேர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி: ஒருவர் பலி appeared first on Dinakaran.