தாராபுரம்: தாராபுரத்தில் பாலம் கட்ட தோண்டப்பட்ட குழிக்குள் மொபட்டுடன் விழுந்து தம்பதி பலியானார்கள். மகள் படுகாயம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வக்காரன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). திருப்பூர் பழவஞ்சிபாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆனந்தி (38). தனியார் பனியன் கம்பெனி ஊழியர். மகள் தீட்சனா (13) தாராபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி, மகள் மூவரும் ஆன்மீக பயணமாக திருச்செந்தூர், திருநள்ளாறு கோயில்களுக்கு சென்று தாராபுரத்துக்கு திரும்பி வந்தனர். நேற்று அதிகாலை தாராபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது மொபட்டில் மகளுடன் 2 பேரும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தாராபுரம் காங்கயம் சாலை குள்ளாய்பாளையம் மாந்தோப்பின் அருகே சென்றபோது அங்கு சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக 3 ஆழமான குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. அதற்கு தகுந்த சாலை பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வந்த நாகராஜ் சாலையில் வந்த மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக மொபட்டை ஒதுக்கி ஓட்டினார். அப்போது பாலம் கட்ட தோண்டப்பட்ட 30 அடி ஆழமான குழிக்குள் மொபட்டுடன் 3 பேரும் விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ், ஆனந்தி இருவரும் பரிதாபமாக பலியாகினர். தீட்சனா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என விடிய விடிய சத்தமிட்டு கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுவினர் மூணாருக்கு சுற்றுலா சென்றுவிட்டு அந்த வழியாக திரும்பி வந்தனர். அப்போது குழிக்குள் இருந்து குரல் கேட்பதை அவர்கள் உணர்ந்தனர். உடனே தாங்கள் வந்த வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று பார்த்தனர். அப்போது குழிக்குள் 3 பேர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீட்சனாவுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று விபத்து நடந்த சம்பவ இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The post பாலம் கட்ட தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து தம்பதி பலி: தாராபுரத்தில் பரிதாபம் appeared first on Dinakaran.