பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்(30). வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகின்றார். அவ்வப்போது, கட்டிட மேஸ்திரி வேலையும் பார்த்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி(23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 வயது, 3 வயது என 2 மகன்கள் உள்ளனர். விஜயசாந்தி ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக தம்பதியினரிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை ரவிக்குமாரின் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக்கொண்டு ரவிக்குமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விஜயசாந்தியின் தலை, முகம், கழுத்து, மார்பு பகுதியில் சரமாரி வெட்டி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயசாந்தியை மீட்டு இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, ரவிக்குமார் தானும் மனைவியுடன் வருவதாக கூறி சென்றுள்ளார். தொடர்ந்து பள்ளிகொண்டா அரசு மருத்துவமனையில் விஜயசாந்தி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அப்போதும் ஆத்திரம் அடங்காத ரவிக்குமார் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மருத்துவமனையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சடலமாக கிடந்த விஜயசாந்தியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் விஜயசாந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஜயசாந்தியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பள்ளிகொண்டா அருகே நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை சரமாரி வெட்டிக்கொன்ற கணவன்: டாக்டர்கள் முன் சடலத்தை கத்தரிக்கோலால் குத்தியதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.