![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35689542-world-03.webp)
வாஷிங்டன்,
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த நிலையில், உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான மனிதாபிமான உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளைத் தவிர அனைத்து வெளிநாட்டு உதவிகளுக்கான புதிய நிதியை அமெரிக்க வெளியுறவுத்துறை முடக்கியுள்ளது.
இந்த உத்தரவால் உலக அளவில் சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் பிற வெளிநாட்டு உதவி திட்டங்களுக்கு அமெரிக்க அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிதியானது உடனடியாக நிறுத்தப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த முடிவு, அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உதவித் திட்டங்களை நீக்குவது தொடர்பான ஜனாதிபதி டிரம்ப்பின் உறுதிமொழியை அமல்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான சுற்றறிக்கை உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்க அரசின் உதவி திட்டங்களுக்கு தற்போது இருப்பில் இருக்கும் நிதியை தவிர புதிய நிதியை செலவு செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அமெரிக்க அரசு சார்பில் உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான உதவி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் எவற்றைத் தொடரலாம் என்பது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மறுஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த 3 மாதங்களுக்குள், அரசாங்க அளவிலான மதிப்பாய்வு நிறைவடையும் என்றும், அதைத் தொடர்ந்து இது தொடர்பான பரிந்துரை அறிக்கையை ஜனாதிபதிக்கு டிரம்ப்பிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.